Monday, June 29, 2015

நூல் நான்கு – நீலம் – 05

நூல் நான்கு – நீலம் – 05

அஞ்சுபவன் உள்ளத்தில் ஐந்து பேய்கள் குடியேறுகின்றன பெண்களே. ஐயமும், தனிமையும், விழிப்பும், குரூரமும், நிறைவின்மையும் என அவற்றை அவன் அறிவான். தன்னைத்தானே அஞ்சுபவனிடமோ ஐந்து பேய்களையும் தேர்க்குதிரைகளாகக் கட்டி விரையும் ஆறாவது பெரும்பேய் குடியேறுகிறது. அதை ஆணவம் என்கின்றனர் சான்றோர். அது தொட்டவனை தான்கொண்டு செல்வது. பட்டகுடியை பாழ்நிலமாக்கியபின்னரே விலகுவது

விண்ணிலிருந்து நோக்கும் தெய்வங்களுக்கு கீழே விரிந்திருக்கும் நதிகளும் மலைகளும் நாடுகளும் நகரங்களும் கொண்ட விரிநிலம் ஒரு பெரும் ஆடுகளம். அதைச்சுற்றி அமர்ந்து அவர்கள் சிரித்து அறைகூவியும் தொடைதட்டி எக்களித்தும் காய்நகர்த்தி களிகொண்டு விளையாடுகிறார்கள். கைநீட்டி காய் அமைக்கும் தெய்வத்தின் கரங்களுக்குத் தெரிவதில்லை கீழே கண்ணீரும் குருதியுமாக கொந்தளித்து அமையும் மானுடச்சிறுவாழ்க்கை.

வளையோரே, அறிவிலாதோர் அக்கணமே அச்சம் மூலம் அனைத்தையும் அறிந்திருப்பர். அறிவுடையோர் அறிவின்மூலம் அறிந்துகொள்வர். அறிவிருந்தும் அறியாமை கொண்டவனோ அறியவேமுடியாதவன்.

அறிதலும் அறியாமையும் கொண்டு வாழ்வை ஆடமுடியுமா என்ன? இது தெய்வங்களின் ஆடற்களம். இதில் வெல்லலும் தோற்றலும் இல்லை. விதியறிந்து அமைதலொன்றே விவேகமாகும்


Wednesday, June 24, 2015

நூல் நான்கு – நீலம் – 04

நூல் நான்கு – நீலம் – 04

மண்ணை ஒருகண்ணால் நோக்கும் மன்னன் மறுகண்ணால் தன் மூதாதையரின் சொல்லையும் நோக்கியாகவேண்டும்.

இளையோரே, அடித்தளத்தில் அளவுபிழைத்த மாளிகை கோபுரத்தில் கோணலையே காட்டும் என்றறிக. மூத்தோர் நெறிமீறும் முதலடியிலேயே முற்றழிவின் முதற்சொல்லும் சொல்லப்பட்டுவிட்டது. வாழும் மானுடரைச்சுற்றி நிறைந்திருக்கின்றது மூதாதையரின் மூச்சு. அறிந்தவற்றை மீறலாகும், அறியாமல் இங்கிருக்கும் அவர்களை எவர் மீறிச்செல்ல முடியும்?

எதிர்ப்படும் ஒவ்வொரு வீரனின் விழிகளிலும் படைக்கல முனைகளிலும் இருந்த தேடலை நினைவுகூர்ந்தேன். 

“மண்ணில் மாளாப்பெருந்துயரம் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது இளையோரே. ஆனால் அன்னையரின் விழிநீருக்கு அவையேதும் இணையில்லை. மன்னவர் ஆள்வதும் அறங்கள் திகழ்வதும் தெய்வங்கள் எழுவதும் அன்னை விழிநீரின் ஈரத்தில் வேரூன்றியே” என்றபின் திரும்பி கோயில் நோக்கி கைகூப்பி “தாயே, தாங்குபவளே, நீ முனியாதவரை இங்கு வாழும் எளிய மானுடம்!” என்று சொல்லி கையூன்றி எழுந்தார்.

Monday, June 22, 2015

நூல் நான்கு – நீலம் – 03

நூல் நான்கு – நீலம் – 03

என்னை ஆட்கொண்டிருக்கும் பெருமயல் கண்டு மாயவர் அஞ்சுவர். பேயவர் உடன் வந்து நடமிடுவர்…

சிறகு முளைத்தபின் எந்தப்பறவையும் கூடுகளில் அமர்ந்திருப்பதில்லை தோழி.”

பசுக்களின் மடி நிறைக்கும் தெய்வங்களின் பெயர்களை நாவுக்குள் சொல்லி ஊழ்கத்திலிருக்கும் மூதன்னையர் போல பனிசொட்டும் இலைநுனிகளுடன் இருளுக்குள் மூழ்கிநின்ற பெருமரங்கள் அரணிட்ட யமுனைப்பாதையில் சென்று இருளுக்குள் கனிவே ஒளியாக ஓடிக்கொண்டிருந்த நதிக்கரையை அடைந்தனர்.

அஞ்சி வளையும் மணிமயில் கழுத்தென ஒரு நொடி. சிலிர்த்துத் தோகை நடுங்கும் மறு நொடி. மலர் உதிரும் கிளையசைவென ஒரு நொடி. வானிலெழும் புள்சிறகென மறு நொடி. வெளித்த வெறும் வானமென ஒரு நொடி. பெருகும் மேகவெள்ளமென மறு நொடி. ஒளியென ஒரு நொடி. அதிலோடும் ஓங்காரமென மறு நொடி. காலமே, இங்கே சுழித்துச் சுழித்து நீ நின்றிருந்தால் அங்கே பிரம்மம் எவ்வண்ணம் தன்னை நிகழ்த்தும்?

உள்ளே சென்ற ராதையின் உடைவண்ணம் இருளில் மூழ்கியதை கண்டாள். நடுங்கும் காலடிகளுடன் அவளும் உள்ளே சென்றாள். அரையிருளில் தரையிலிட்ட புல்பாயில் மரவுரி விரிப்பின் மீது ஒருக்களித்து விழிவளர்ந்தது வானாளும் விரிநீலம். ஓடும் கால்கள் என ஒன்றிலிருந்து ஒன்று தாவி எழுந்து நின்றன செவ்வல்லியிதழ்ப் பாதங்கள். முக்குற்றி மலரிதழே நகங்கள். தெச்சிப்பூங் கொத்தே விரல்கள். பாதங்களும் புன்னகைக்குமோ? மெல்ல உட்குவிந்து முகம் சுளித்து செல்லம் சிணுங்குமோ? கட்டைவிரல் விலகி உடல் நெளித்து நாணுமோ? நீலக்குவளை மலர்க்குழாயென கணுக்கால். கரண்டையில் எழுந்த சிறுமடிப்பு. நீலம் செறிந்த முட்டுக்கள். இப்புவியாள இரு பாதங்களே போதுமே. ஏன் முழுதாக வந்தாய்?

ராதை அருகமரும்போதுதான் தன்னுள்நிறைந்த மயக்கத்தில் விழிகரைந்துகிடந்த யசோதை விழித்து நோக்கினாள்
முட்டைக்குள் விழித்த கிளிக்குஞ்சின் இருமணிவிழிகள்.

இங்கு இவ்விழிகளறியும் இவ்வுலகுக்கப்பால் எங்கு நின்று எதையுணர்வேன்?   தங்கி நின்று தயங்கி நின்று துளித்தாடும் இச்சிறு உயிர்த்துளி உலைந்தாடி உதிர்ந்துவிடும் கண்ணே. போதும், இவ்வழகுக்குமேல் ஒரு துளியழகையும் தாளாது இப்புவியென்றறிந்தபின் இவ்வளவோடு அமைந்தாயா?

படிந்த சிறுபண்டியின் செவ்வரிக்கு நூறுமுறை இறப்பேன். மடிந்த சிறுபுயங்களில் விழுந்த கோடுக்கு ஆயிரம் முறை இறப்பேன். பிரிந்த செவ்விதழ்களுக்குள் பால்விழுது தங்கிய ஈறுநுனி மொட்டுக்கு பல்லாயிரம் முறை இறப்பேன். கண்நீலக்கருமணியே உன் மூக்குவளைவின் இந்த அழுந்தலுக்காக கோடிமுறை இறப்பேன். இவ்வழகின் முழுமுனையின் இப்பால் இங்கிருந்து இவ்வுடல்கொண்டிருக்கும் பெரும்பாவத்தை இறந்திறந்து களைகிறேன். உன்னை அள்ளி உண்டு நானாக்குகிறேன். உன்னைத்தழுவி என்னுள் செலுத்திக்கொள்கிறேன். வாய்திறந்தொரு கருஞ்சுழிப்பெருவெளியாக எழுக. உன் உணவாகி உன்னுள் மறைகிறேன். இருத்தலென்றறியும் இப்பெரும்வதையில் இருந்து இருளில் உதிர்கிறேன். ஆதலென்றாகும் அப்பெருங்களியில் ஏதும் எஞ்சாமலாகிறேன். சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து இப்புவியில் திரண்டதோர் பித்துப்பெருவெளியின் விளிம்பில் நின்று கண்ணீர் துளிக்கிறேன்.

உடல் எத்தனை மகத்தானது. அவனுக்காக அழகுகொள்ளும் வரம் அதற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நிலையிழந்தாடும் உள்ளமே இரங்கத்தகுந்தவள் நீ. இங்கே நான், இதோ நான், இவ்வண்ணமே நான் என இருத்தலே அறிவிப்பாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் வரம் உனக்கில்லை. உள்ளி உள்ளி ஓராயிரம் தவம்செய்தாலும் ஓதி நூல் ஒருகோடி அறிந்தாலும் இவ்வுடலறிந்ததை அகம் அறியுமா என்ன? உன்னை என் கண்களால் அறிகிறேன். என் உதடுகளால், கைகளால், கன்னங்களால் அறிகிறேன். உன்னை அறிந்து உருகித் துளிக்கின்றன என் மார்பில் பூத்த மலர்க்குவைகள். எங்கோ விழுந்து திகைத்து விழிமலைத்துக் கிடக்கிறது என் இளநெஞ்சம்.
Friday, June 19, 2015

நூல் நான்கு – நீலம் – 02

நூல் நான்கு – நீலம் – 02

தன்னுள்தானே நுழைந்து மீண்டுமொரு விதையாக ஆகவிழைபவள் போல கால்களை மடித்து மார்போடு இறுக்கி கைகளால் வரிந்து முறுக்கி முட்டுகளின்மேல் முகம்சேர்த்து அமர்ந்துகொண்டாள். 

இளந்தூறல் பரவிய மென்வெளிச்சத்தில் பொங்கிப் பொங்கி எழுகிறது புள்வேதம். மையல்கொண்டிருக்கின்றது மணிப்பொழில். அங்கே கேட்கும் அத்தனை பறவைக்குரல்களையும் ஒன்றொன்றாய் தொட்டுத் தொட்டு மீள்கிறேன். ஒவ்வொரு சொல்லும் அதுவே. ஒரு சொல்லும் அவனல்ல. தனித்து கனத்து என் தாபம் திரும்பிவந்து தன் கூடணைந்து நெட்டுயிர்த்து வாயில் மூடும் கணம் தேன்மாமரத்தின் கிளையில் வந்தமர்ந்த குயில் அவன் பெயரைச் சொன்னதைக் கேட்டேன். அக்கணமே இறந்தேன்.

Wednesday, June 17, 2015

நூல் நான்கு – நீலம் – 01

நூல் நான்கு – நீலம் – 01

‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ

மண்ணிலினி ஒரு போதும் நிகழமுடியாத பேரழகி நீ. ஆயர்குலச் செல்வி, அழகால் நீ இப்புவிக்கே பேரரசி. பொன்னுருகி வழிந்த உன் நெற்றி வகிட்டின் நுனியில் அசையும் குறுங்குழல் சுருள்களை நீவுகின்றேன். உன் மூக்கின் மலர்வளைவை முத்தமிடுகிறேன். உன்மேலுதட்டின் பூமயிர் பரப்பில் என் மூச்சு பரவுகிறது. உன் மொட்டு விரியா இதழ்களை சுவைக்கிறேன். கன்னி, உன் அழகிய கழுத்தின் மூன்று பொன் வரிகளையும் என் விரல்களால் வருடி அறிகிறேன்.
அங்கெலாமில்லை என்பதுபோல் தளிர் விரல் விரித்து விழுந்து கிடக்கும் உன் இடக்கையின் கைவெண்மையில் எழுந்த அவன் சங்குக்கு முத்தம். பொன்பதக்கத்தில் ஓடிய பொன்வரிகளுக்கு முத்தம். உன் இடக்கையைத் தூக்கி இவ்வுலகை வாழ்த்து. தேவி, சக்கரம் திகழும் உன் அழகிய வலக்கை இங்குளான் என்று உன் நெஞ்சிலமர்ந்திருக்கிறது. நாளை அவனை சிறுசெல்லக்கோபம் கொண்டு அடிக்கவிருப்பது அது. இவ்வுலகில் காமத்தைப் படைத்தளித்து விளையாடும் கயவனை நீயன்றி வேறுயார்தான் தண்டிப்பது?
முத்தத்தால் மட்டுமே அறியமுடிபவளே. உன் முத்தங்களை எல்லாம் சேர்த்து வை. இளவியர்வையின் மணம் பரவிய உன் முகிழா இளமுலைக்குவைகளை நான் அறிகிறேன். மலர்க்காம்பு நாணம் கொண்டு மலருக்குள் மறைவதுண்டோ தோழி? என் நாவால் தீண்டி அவற்றை விழிப்புறசெய்கிறேன். இதோ, பொற்குவை ஆவுடை மேல் எழுந்தன இரு  இளநீல சிவக்குறிகள். தேவி, உன் மென்வயிற்றுக் குழைவில் விழுந்தால் அப்பொன்நதியின் சுழியில் மறைந்து எந்த யுகத்தில் விழித்தெழுவேன்?
ஒருபோதும் ஆணுக்கு அவன் நியாயம் செய்ததில்லை தோழி. சூல்கொள்ளும் வயிற்றையும் அமுதூறும் முலைகளையும் அவன் ஆணுக்கு அளிக்கவில்லை. உண்ணப்படுவதற்கான உதடுகளையும் பருகப்படுவதற்கான புன்னகையையும் அளிக்கவில்லை. கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை. அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் கொடுக்கவில்லை..
விண்சுருங்கி அணுவாகும் பெருவெளியை வெறும்சிறகால் பறந்துசெல்ல ஆணையிட்டான் ஆணிடம். சென்றடைந்தோரெல்லாம் கண்டது கடுவெளியே அதுவாகி எழுந்து நின்ற கழலிணைகளை மட்டுமே. பெண்களுக்கோ பெற்றெடுத்து முலைசேர்த்தால் மட்டுமே போதுமென்று வைத்தான் பாதகன்! அப்பிழையாலே அவன் தானும் ஆணாகப் பிறக்கவேண்டுமென்றானான்.
பெண்மையின் முழுநிறையே, மலரிதழ் ததும்பித்திரண்டு ஒளிரும் பனித்துளி போன்றது கன்னிமை. நீ அழியா பெருங்கன்னி. பெறாத கோடிப் பிள்ளைகளால் இப்புவியை நிறைக்கவிருக்கும் பேரன்னை! நீ வாழ்க! உன் பெயர் இனி யுகயுகங்களுக்கு வாழும். அடி, ஆயர்குலச்சிறுக்கி! பிரம்மகணத்தில் அவன் பெயர் அழிந்த பின்னும் அரைக்கணம் உன் பெயர் வாழும்.

Sunday, March 1, 2015

நூல் மூன்று – வண்ணக்கடல் – 71

 நூல் மூன்று – வண்ணக்கடல் – 71

சூதரே, மாகதரே, பாடுங்கள்! தேடுபவர்கள் எப்போதும் கண்டடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளம்போல வினா அவர்களை இட்டுச்செல்கிறது. சரிவுகளில் உருட்டி அருவிகளில் வீழ்த்தி சமவெளிகளில் விரித்து கொண்டுசென்று சேர்க்கிறது. பெருங்கடலைக் காணும்போது ஆறு தோன்றிய இடமெதுவென அறிந்துகொள்கிறார்கள்.
இப்பிரபஞ்சவெளியில் உண்மையில் வினாக்களே இல்லை, ஒற்றைப்பெரும் விடை மட்டுமே உள்ளது. வினாக்கள் என்பவை அதன் பல்லாயிரம் கரங்கள் மட்டுமே. அவை ஒவ்வொரு கணமும் துழாவிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் தளிர்முனைகள் உரியவர்களை கண்டுகொண்டு மெல்லச் சுற்றிவளைத்துக்கொள்கின்றன. அவர்களுக்கு பின் மீட்பில்லை.
======
 பல்லாயிரம் பேர் உடனிருக்கையிலும் தான் என்று மட்டுமே உணர்ந்தவன். தான் தேடுவதென்ன என்று தனக்குத்தானே கூட ஒருமுறையேனும் சொல்லிக்கொள்ளாதவன்.
====
குருதிவாசம் ஏற்ற வேங்கை போல அவன் பாரதவர்ஷமெனும் பெருங்காட்டில் நுழைந்தான். வலசைப்பறவை போல தன் சிறகுகளாலேயே கொண்டுசெல்லப்பட்டான். அவன் தங்கிய ஒவ்வொரு ஊரும் அவனை வெளித்தள்ளியது. அப்பால் வெறும்பெயராக எழுந்த ஒவ்வொரு ஊரும் அவனை அழைத்தது.
அவன் தானறிந்தவற்றை எல்லாம் அக்கணமே கழற்றிவிட்டுச் செல்பவனாக இருந்தான். தான் தேடுவதைத்தவிர எதையும் தக்கவைக்காதவனாக இருந்தான். எனவே ஒவ்வொரு கணமும் வெறுமைகொண்டபடியே இருந்தான். ஒற்றைக்குறி பொறிக்கப்பட்ட அம்பு அவன். அவன் குறித்த பறவை அவன் கிளம்புவதைக் கண்டு புன்னகையுடன் கனிந்து தன் முட்டைக்குள் நுழைந்துகொண்டு தவமிருந்தது. உடல்கொண்டு சிறகுகொண்டு கூரலகு கொண்டு வெண்ணிறச் சுவரை உடைத்து வெளிவந்து விழிதிறந்து இன்குரல் எழுப்பியது. அது செல்லவேண்டிய தொலைவை எண்ணி மென்சிறகை அடித்துக்கொண்டது.
தமிழ்நிலமும் திருவிடமும் வேசரமும் கலிங்கமும் கடந்து அவன் வந்தான். ஆசுரமும் நிஷாதமும் கண்டு அவன் சென்றான். காலைக்காற்றால் சுவடின்றி அழிக்கப்பட்டன அவனுடைய பாதைகள். அவன் அகமோ பறவை சென்ற வானம் என தடமின்றி விரிந்திருந்தது. இனிய ஒளிகொண்ட சிறிய சிலந்திபோல அவன் ஒளியே என நீண்ட வலைநூல்களில் ஒன்றைப்பற்றி ஊசலாடி பிறிதொன்றில் தொற்றிக்கொண்டான். அந்த மாபெரும் வலைநடுவே விழிதிறந்து விஷக்கொடுக்குடன் அமர்ந்திருந்தது முதல்முடிவற்ற அந்த விடை. அது வாழ்க!
====
தெய்வங்களே, நீங்கள் மானுடரை நோக்கி சிரிப்பதென்ன? உங்கள் எண்ணச்சுழலில் நீந்தித் திளைத்து மூழ்கும் எளிய உயிர்களை ஒருநாளும் நீங்கள் அறியப்போவதில்லை.
====நூல் மூன்று – வண்ணக்கடல் – 70

 நூல் மூன்று – வண்ணக்கடல் – 70

 பாரதவர்ஷத்தின் வரலாறு என்றென்றும் நினைத்திருக்கக்கூடிய தருணம். நிகழ்வை விட சொல் வல்லமை மிக்கதா என்ன? ஆம், நிகழ்வன வெறும் பருப்பொருளில் முடிந்துவிடுகின்றன. பொருளும் உணர்வும் சொல்லாலேயே ஏற்றப்படுகின்றன. சஞ்சயனின் சொற்களைக் கேட்க வேண்டுமென தருமனின் உள்ளம் விழைந்தது.
===
உயரமின்மை போலவே உயரமும் அழகற்றது. ஒத்திசைவின்மையை உருவாக்குவது. வியக்கவைக்கும் உயரமிருந்தும் அளந்து செதுக்கியதுபோன்ற அங்கங்கள் கொண்டவர் என அவன் எண்ணியிருந்தது பிதாமகர் பீஷ்மரை மட்டுமே. ஆனால் நாகப்பழம்போல மின்னும் கன்னங்கரிய தோலும், இந்திரநீலம் சுடரும் விழிகளும் சினத்திலும் கருணை மாறா புன்னகையும் கொண்ட கர்ணன் மானுடன்தானா என்று வியக்கச்செய்யும் பேரழகு கொண்டிருந்தான். விழிகள் தோள்முதல் தோள்வரை மார்பு முதல் இடைவரை அலைந்துகொண்டே இருந்தன. அழகன் அழகன் அழகன் என அகம் அரற்றிக்கொண்டே இருந்தது.
===
 “அவனைப்போன்றவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை மூத்தவரே. தேவை என்றால் தெய்வங்கள் இறங்கி வரும்” என்றான்.
====
சிம்மம் தன் வல்லமையாலேயே காட்டரசனாகிறது. இவன் நுழையமுடியாத எந்த சமர்களமும் இப்புவியில் இருக்க இயலாது” என்றான்.
====
“இதோ கைலாய முடிமேல் கதிரவன் எழுந்தான்! அரியணை அமர்ந்தான் கர்ணன்! கருணைகொண்டவனின் கருவூலத்தை நிறைக்கும் தெய்வங்களே இங்கு வருக! எளியவரின் கண்ணீரை அறிந்தவன் மேல் வெண்குடைவிரிக்கும் அறங்களே இங்கு வருக! கொடுப்பதை மட்டுமே அறிந்தவன் தான் பெற்றுக்கொண்ட ஒரே தருணத்துக்கு நீங்களே சான்றாகுக!” என்றார். கூட்டம் கைகளைத் தூக்கி ‘வாழ்க! வாழ்க!’ என்றது. பல்லாயிரம் விழிகளில் இருந்து கண்ணீர் சொட்டும் அதற்கிணையான ஒரு தருணம் அஸ்தினபுரியில் இனி நிகழாது என்று தருமன் எண்ணிக்கொண்டான்.
====
கிருபரும் துரோணரும் வந்து கர்ணனை மலரும் அரிசியுமிட்டு வாழ்த்தினர். கிருபர் “வெற்றி நிறைக!” என்று வாழ்த்தி “அரசனும் அரசும் முறைமைகளால் மட்டும் ஆனவை. ஒருபோதும் முறைமைகளை மீறாமலிரு” என்றார். துரோணர் அவனை வாழ்த்தி “முள்மேலிருப்பவனே நல்ல மன்னன் என்கிறது பிரஹஸ்பதியின் நூல். அவ்வண்ணமே ஆகுக! அறம்பிழைக்காமலிரு!” என்றார். சகுனி கர்ணனை கைவிரித்து ஆரத்தழுவிக்கொண்டு “தலைமுறைகள்தோறும் அங்கநாடு அஸ்தினபுரி என்னும் ரதத்தின் சகடமாக அமையட்டும்” என்றார். கர்ணன் “ஆம்” என்றான்.
===
தருமன் நின்று “ஆம் தம்பி, நாம் வெல்வோம்…” என்றான். “இன்று எனக்கு அது தெரிந்தது. சுயோதனன் கர்ணனை நம்பி அத்துமீறுவான். அறம் பிழைப்பான். அதன் விளைவாக நம்மிடம் தோற்பான். ஆனால்…” அர்ஜுனன் எதிர்பார்ப்புடன் நின்றான். “தன் அறத்தால் இச்சூதன்மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி” என்றான் தருமன். பார்வையை விலக்கி தலைகுனிந்து அவன் சொன்னான் “இன்று அந்த முதுசூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்தபோது அவன் இடத்தில் என்னை வைத்து நடித்துக்கொண்டிருந்த நான் ஆழத்தில் கூசிச்சுருங்கினேன். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. இந்தப் பேரவையில் அவன் பாததூளியை தலையிலணிய சற்றும் தயங்கவில்லை. அஸ்தினபுரியின் இளவரசனாக அறிவிக்கப்பட்டவன் சூதனின் மைந்தனாக தன்னை முன்வைத்தான். அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்.”
====